மறைந்த முதலமைச்சர் ஜெய லலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கும் "தலைவி" என்ற தமிழ் படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய்யும், ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் "குயின்" என்ற இணையதள தமிழ்த் தொடரை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும் இயக்கி வருகின்றனர்.
இந்நிலையில், தன் அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், குயின் தொடரையும் தயாரிக்க, விளம்பரப்படுத்த, திரையிட தடை விதிக்கக் கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகளான ஜெ. தீபா உரிமையியல் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திரைப்படத்தையும், இணையதளத் தொடரையும் பார்க்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும். படத்தைப் பார்த்து ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க வேண்டும் என வாதிட்டார்.
இயக்குநர் விஜய் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், தலைவி திரைப்படம், ' தலைவி' என்ற பெயரில் வெளியான புத்தகத்தை தழுவி எடுக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ள இந்தப் புத்தகத்துக்கு இதுவரை தடை ஏதும் கோரப்படவில்லை. தீபா ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என வாதிட்டார்.
இணையதளத் தொடர் தயாரிக்கும் கெளதம் வாசுதேவ் மேனன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து, இந்தத் தொடர் தயாரிக்கப்படவில்லை. மாறாக 'குயின்' என்ற புத்தகத்தைத் தழுவியே எடுக்கப்படுகிறது.