தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் அனைத்து நகர உள்ளாட்சிகளுக்கானத் தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் இரா. பழனிசாமிக்கு தன்னாட்சி பொதுச் செயலாளர் நந்தகுமார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், “நேற்று (டிச.6) உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் [IA No. 182868/2019 in CIVIL APPEAL NOS. 5467-5469/ 2017] தமிழ்நாட்டில் புதிதாக அறிவிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகியவை நீங்கலாக, அனைத்து மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு அனுமதித்ததோடு, மேற்குறிப்பிட்ட 9 மாவட்டங்களுக்கும் உரிய வார்டு மறு வரையறைகளை மேற்கொண்டு, 4 மாத காலத்திற்குள் தேர்தல்களை நடத்தி முடிக்க உத்தரவிட்டது தாங்கள் அறிந்ததே.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் அடிப்படையில் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றிருக்க வேண்டிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் கரோனா ஊரடங்கு காரணத்தால் நடைபெறவில்லை என ஊடகங்கள் மூலம் அறிய வருகிறோம். தற்போது படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்துவதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது.
மேலும், கடந்த மாதங்களில், பிகார் மாநிலத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. கேரள மாநில தேர்தல் ஆணையம், தள்ளி வைத்த உள்ளாட்சித் தேர்தல்களை இந்த மாதத்தில் நடத்த இருக்கிறது. கர்நாடகத்திலும் இதே சூழல் உள்ளது. அதே போலத் தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் நகர உள்ளாட்சித் தேர்தலும், ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்களும் அண்மையில் நடந்து முடிந்துள்ளன. இவை அனைத்தும் தமிழ்நாட்டில் உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றித் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி முடிக்க முடியும் என்பதையே காட்டுகின்றன.
இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 ஆகியவற்றின் அடிப்படையில் உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்த 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை நீதிமன்றங்கள் தொடர்ந்து குறிப்பிடப்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் அனைத்து நகர உள்ளாட்சித் தேர்தல்கள் தமிழ்நாட்டில் நடைபெறாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது