சென்னை: சௌகார்பேட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில், கமல் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கேள்வியெழுப்பி ட்வீட் செய்துள்ளார்.
நேற்றிரவு சென்னை சௌகார்பேட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அப்பா, அம்மா, மகன் என 3 பேரையும் அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து சுட்டுக் கொன்றனர். அவர்கள் 3 பேருக்குமே நெற்றியில் குண்டு துளைத்திருந்தது. யார் கொன்றது என்று தெரியவில்லை.
இது சொத்துக்காக நடந்த கொலையாக இருக்கலாம் என காவல் துறையினர் சந்தேக்கின்றனர். தொலைக்காட்சி சத்தத்தை அதிகமாக வைத்துவிட்டு இந்த கொலைச் சம்பவத்தை கொலையாளிகள் நிகழ்த்தியுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த கொடூரச் செயலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுசம்பந்தமாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "தலைநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
உள் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், அறிக்கையின் மீது காட்டும் ஆர்வத்தை, மக்களைக் காப்பதில் காட்ட வேண்டும். பழி போடும் அரசியலை நிறுத்தி விட்டு ஆயுதக் கலாசாரம் அடியோடு ஒழிக்கப்பட வழி தேடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.