தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 1, 2019, 8:06 AM IST

ETV Bharat / city

பெரியார் பேருந்து நிலையத்திற்கு கோபுர நுழைவாயில்? - அதிமுக அரசுக்கு கி.வீரமணி எச்சரிக்கை

மதுரை: பெரியார் பேருந்து நிலையத்திற்கு கோயில் கோபுர வடிவில் நுழைவாயில் அமைக்கும் முயற்சியை அதிமுக அரசு கைவிடவில்லையெனில், போராட்டம் வெடிக்கும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எச்சரித்துள்ளார்.

கி. வீரமனி

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு கோயில் கோபுர வடிவிலான நுழைவாயில் அமைக்கும் பணியில் அதிமுக அரசு ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை மாநகரில் தந்தை பெரியார் பெயரில் பேருந்து நிலையம் 48 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. இப்பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்படவுள்ளது. மீனாட்சியம்மன் கோயில் கோபுர வடிவத்தில் வரைபடத்தை அங்கு பொறிக்கப்படும் என அரசு கூறியது. இதற்கு கடும் எதிர்ப்பு வெடித்ததையடுத்து, மாற்றப்படும் என மாநகர ஆணையர் கூறினார். ஆனால், திடீரென்று நேற்று அமைச்சர் வேலுமணி, கோபுரம் வடிவிலான வரைபடமே வடிவமைக்கப்படும் என்று கூறியுள்ளார். தந்தை பெரியார் பெயரில் நிர்மாணிக்கப்பட்ட ஒரு பேருந்து நிலையத்தை, கோவில் கோபுர வடிவத்தில் மாற்றுவது தந்தை பெரியாரைக் கொச்சைப்படுத்துகிறது.

அண்ணாவின் பெயரையும், ‘திராவிட’ கலாச்சாரப் பெயரையும் கட்சியில் வைத்துக்கொண்டும், தந்தை பெரியார் பெயரையும் ஒரு பக்கத்தில் உச்சரித்துக் கொண்டும், சுவரொட்டிகளில் அவர் உருவத்தைப் பொறித்துக் கொண்டும், இன்னொரு பக்கத்தில் இவைகளுக்கு முற்றிலும் முரண்பாடாக அதிமுக அரசு நடந்துகொள்வது கேலிக்குரியது. இன்னொரு வகையில் ஒரு மதச்சார்பற்ற அரசில், அரசுக்குச் சொந்தமான நிறுவனத்தில் மத அடையாளத்தைப் புகுத்துவது சட்டப்படியும் தவறான ஒன்றே.

தமிழ்நாடு அரசு இதுபோன்ற வீண் வேலைகளில் ஈடுபடாமல் நாட்டுக்கு மிகவும் தேவையான வளர்ச்சிப் பணிகளில் நாட்டம் செலுத்துவதே நல்லது. இல்லையெனில் மதச்சார்பற்ற சக்திகள், கட்சிகளை ஒன்றிணைத்துக் கடும் போராட்டத்தை நடத்திடும் நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்", என்று அறிக்கையில் கூறியுள்ளார். மேலும், குளவிக்கூட்டில் கை வைக்கவேண்டாம் எனவும், வேண்டாத வேலையிலும் அதிமுக அரசு ஈடுபட வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details