சென்னை மயிலாப்பூரில் தேசிய சணல் வாரியம் சார்பாக நடத்தப்பட்ட சணல் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில், சணலால் செய்யப்பட்ட பைகள், கைவினைப் பொருட்கள், பொம்மைகள், நகைகள், செயின், தலைக்குப் போடும் கிளிப், சணலால் செய்யப்பட்ட ஓவியங்கள், செல்போன் கவர்கள், கோப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
காய்கறிகளை வாங்கி சேமிக்க வலை வைத்த பைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் காய்கறிகள் வாங்கி அப்படியே குளிர்சாதனப் பெட்டியில் சேமிக்கலாம். இந்தக் கண்காட்சியில் தமிழ்நாடு தவிர்த்து புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த நிறுவனங்கள் சார்பாக 27 ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதனை ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.
இது குறித்து பேசிய பார்வையாளர் சவுந்திரராஜன், "தோல் பைகள், ரெக்சின் பைகளில் கொஞ்சன் அதிக பொருட்களை வைத்தால் கிழிந்து விடும். ஆனால் சணல் பைகள் தரமாக இருக்கும், நீண்ட நாட்கள் உழைக்கும். இங்கு வந்தது திருப்திகரமாக இருந்தது" என்றார்.