தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

செந்தில் பாலாஜி, ஜோதிமணி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத்தடை!

சென்னை: அரவக்குறிச்சி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி மற்றும் கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத்தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

protest
protest

By

Published : Dec 17, 2020, 7:08 PM IST

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களின் முடிவை விரைந்து அறிவிக்கக் கோரி அரவக்குறிச்சி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி மற்றும் கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினர் அவர்கள் மீது அனுமதியின்றி கூடுதல், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி செந்தில் பாலாஜி மற்றும் ஜோதிமணி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் முடிவுகளை விரைந்து வெளியிடக்கோரும் நோக்கில், அமைதியான முறையிலேயே போராட்டம் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், இந்த போராட்டத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து முடங்கியதாகவும், ஆம்புலன்ஸ் உட்பட எந்த வாகனங்களும் நகர முடியாத நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு வரும் ஜனவரி 18 ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்த நீதிபதி, அன்றைய தினம் வழக்கு குறித்து அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும், தண்டனைக்கு தகுதியான வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டுமெனவும், முகாந்திரமற்ற விஷயங்களில் வழக்குப்பதிவு செய்வதை தவிர்க்க வேண்டுமெனவும் காவல்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க:புதிய கட்சிகளால் கவலையில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு

ABOUT THE AUTHOR

...view details