சென்னை:தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான இடங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு குழந்தைகள் வரும் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதேபோல், சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வரும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குழந்தைகளுக்கு ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. இதற்கான அறிகுறிகளாக ஜலதோஷம், மிக அதிக காய்ச்சல், விடாமல் ஏற்படும் இருமல் ஆகியவை உள்ளன. மேலும் உடல் வலி சோர்வு, தொண்டை வறட்சி, வாந்தி வயிற்று வலி போன்றவைகளும் இருக்கின்றன.
இந்த ஃப்ளூ காய்ச்சல் முதல் நான்கு நாட்களில் குணமாகி விடக்கூடியவை. சிலருக்கு மட்டுமே இருமலுடன் ஒரு வாரம் வரை நீட்டிக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் எழிலரசி கூறும்போது,
பருவநிலை மாற்றத்தினால் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு டெங்கு ,வைரஸ் காய்ச்சல் ,ப்ளு, சளி இரும்பல் போன்றவை இருக்கும். ஃப்ளூ காய்ச்சல் குழந்தைகள் பெரியவர்கள் இருவரையும் பாதிக்கும் சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்றவை இதற்கு அறிகுறியாக இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்னர் பன்றி காய்ச்சல் மிக அதிக அளவில் வந்தது, அதன் பின்னர் அந்தளவு வரவில்லை ஆகஸ்டுக்கு பின்னர் ப்ளு காய்ச்சல் இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் அதிகரித்து வருகிறது.
முன்னெச்சரிக்கை: பெரியவர்களுக்கு ஃப்ளூ காய்ச்சல் வரும் பொழுது குழந்தைகளுடன் நெருங்கி பழகாமல் சளியை பாதுகாப்பான முறையில் சிந்தி அப்புறப்படுத்த வேண்டும். சரியான பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டால் குழந்தைகளுக்கு பரவாமல் தடுக்க முடியும்.
ப்ளு காய்ச்சல் குழந்தைகளுக்கு வந்தால் முதலில் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மருத்துவர் நோயின் தன்மையை எடுத்து கூறி தங்களிடம் வருவதற்கான அறிவுரைகளையும் கூறுவார். எனவே பெரியவர்களுக்கு மாற்றி வாங்கி தருவது போல் தராமல் குழந்தை நல மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.