சட்டவிரோத பேனர் வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை செயல்படுத்த தவறியதாக தமிழ்நாடு தலைமை செயலாளர் மீது சமூக செயற்பாட்டாளர் டிராபிக் ராமசாமி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை நீதிபதி சத்தியநாரயணன், புகழேந்தி ஆகியோர் காணொலி காட்சியின் மூலம் விசாரித்தனர்.
அப்போது டிராபிக் ராமசாமி தரப்பில், அதிமுக நிர்வாகி தேவதாஸ் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக வந்த முதலமைச்சரையும் துணை முதலமைச்சரையும் வரவேற்க கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரை காவல் துறையினர் பாதுகாப்புடன் சட்டவிரோதமாக பேனர் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் மற்றும் துணை முதல்வர் இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சட்டவிரோத பேனர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துவருகிறோம் என தலைமை செயலாளர் கூறும் நிலையில் இது போன்ற புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாகவும், இதை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.
உயர்நிதிமன்றம் எச்சரிக்கை மேலும் இதேபோல் தொடர்ந்து பேனர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க தவறினால், தலைமை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து தலைமை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.