தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஊரடங்கு முடியும்வரை கட்டணம் செலுத்தாத மின் இணைப்புகளை துண்டிக்கக் கூடாது - உயர் நீதிமன்றம்

சென்னை: ஊரடங்கு முடியும்வரை வீடு மற்றும் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் மின் இணைப்புகளை துண்டிக்கக் கூடாது என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

highcourt
highcourt

By

Published : May 5, 2020, 12:49 PM IST

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்கள் ஊரடங்கு காரணமாக, தாமதக் கட்டணம் மற்றும் மின் துண்டிப்பு அல்லது மறு இணைப்புக் கட்டணமின்றி மே ஆறாம் தேதிவரை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மின் கட்டணம் செலுத்த மக்கள் கவுன்டருக்கு வருவதைத் தவிர்க்கும் வகையில், ஏற்கனவே பயனீட்டாளர்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்த வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில், மே ஆறாம் தேதிக்குள் மின் கட்டணம் என்ற இறுதி கெடுவை ரத்து செய்யக்கோரியும், ஜூலை 31 ஆம் தேதிவரை தாழ்வழுத்த மின் இணைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என உத்தரவிடக்கோரியும் வழக்கறிஞர் ராஜசேகர் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.

மனுவில், ” வீட்டு மின் இணைப்பு பெற்றவர்கள், விவசாயிகள், சிறு குறு நிறுவனங்கள் ஆகியவை ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மே ஆறாம் தேதிக்குள் கட்டணம் செலுத்துவது என்பது சாத்தியமில்லை. தாழ்வழுத்த மின் இணைப்பு பெற்றுள்ளவர்களில் பெரும்பாலானோர் வருமானம் இழந்திருப்பதை தமிழ்நாடு அரசும், மின் வாரியமும் கருத்தில் கொண்டு ஜூலை 31ஆம் தேதிவரை மின் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அறிவிக்க உத்தரவிட வேண்டும். மேலும், மே ஆறாம் தேதிக்குள் மின் கட்டணம் செலுத்தாத இணைப்பை துண்டிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் “ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அமர்வு முன்பு காணொலிக் காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மே 18ஆம் தேதிவரை மின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும், தாழ்வழுத்த மின் இணைப்புகளை துண்டிக்கக் கூடாது என்று உத்தரவிட்டனர். மேலும், மின் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம் அளிக்கவும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: 'எல்லாம் சரியாகி வருகிறது' என்ற தோற்றத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு முயற்சி - ஸ்டாலின் தாக்கு

ABOUT THE AUTHOR

...view details