தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை - குற்றவாளிகளான இரு ஆசிரியர்கள்

சென்னை: மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை விடுதலை செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

highcourt
highcourt

By

Published : Feb 21, 2020, 1:55 PM IST

செங்கல்பட்டு அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களாக இருந்தவர்கள், நாகராஜ், புகழேந்தி ஆகியோர். 50 வயதைக் கடந்த இவர்கள் இருவரும், பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்தது. செல்போனில் ஆபாச படங்களைக் காண்பிப்பது, பாலியல் சீண்டல்கள் செய்வது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் அவர்கள் மீது, செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தனர். பின்பு, இந்த வழக்கை 2018ஆம் ஆண்டு விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம், ஆசிரியர்களுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்றும், உள்நோக்கத்தோடு புகார்கள் அளித்துள்ளதாகவும் கூறி அவர்களை விடுதலை செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அவ்வழக்கின் விசாரணை நீதிபதி வேல்முருகன் முன்பு நடைபெற்ற போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் ஒரு சாட்சியம் இருந்தாலே போதுமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள போதிலும், இந்த வழக்கில் நான்கு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. எனவே, இரண்டு ஆசிரியர்களின் விடுதலையையும் ரத்துசெய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், கீழமை நீதிமன்றம் விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து, ஆசிரியர்கள் இருவரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தார். மேலும், வருகிற 25ஆம் தேதி அவர்கள் இருவரையும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல் துறையினருக்கு உத்தரவிட்ட நீதிபதி, அன்று தண்டனை விவரங்களை அறிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கோயில் திருவிழாக்களின்போது பெண்களிடம் நகைத் திருடிய இளம்பெண் கைது

ABOUT THE AUTHOR

...view details