சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனித வளமேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசினார்.
தமிழ் மொழிகுறித்துப் பேசிய அவர் தமிழ் மொழி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களைக்கூறினார். தமிழ் மொழிக்கும் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்திற்கும் இடையிலான உறவை வெளிக்கொணரும் வகையில், தமிழ் வேர்ச்சொல் வல்லுநர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து, அகரமுதலி உருவாக்கும் சிறப்புத்திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தப்பட இருப்பதாகத்தெரிவித்தார்.
மேலும் தாய்மொழி கல்வியே தலைசிறந்த கல்வி என்பது அறிவியல் கூறும் உண்மையாகும். தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாடநூல், நோட்டுப் புத்தகம் போன்ற நலத்திட்ட உதவிகள், அரசு நிதியுதவியின்றிச் செயல்பட்டு வரும், தமிழ்வழியில் மட்டும் பாடங்களைக் கற்பிக்கும் பள்ளிகளில் 1 முதல் 10ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு, இலவசப் புத்தகங்கள் இந்த ஆண்டு முதல் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.
மாணவர்கள் தொல்லியல் மரபு அறிய அருங்காட்சியகம்
பொதுமக்கள், குறிப்பாக மாணவர்களிடையே தமிழ் தொல்லியல் மரபு குறித்து ஆர்வத்தை ஏற்படுத்திடவும், நமது மாநிலத்தில் கிடைத்துள்ள பெரும்பொருட்களைப் பேணிப்பாதுகாக்கவும், அருங்காட்சியகங்களும், அகழ் வைப்பகங்களும்(on-site museums) மேம்படுத்தப்பட வேண்டும். இவ்வாண்டு,விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அரசு அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும்.
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் உள்ள பழங்குடியினர் அகழ்வைப்பகம், திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் உள்ளதொல் பழங்கால அகழ்வைப்பகம், தர்மபுரியில் உள்ள நடுகற்கள் அகழ்வைப்பகம் ஆகியவை 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
மாநிலத்தில் உள்ள பழமையான பொதுக் கட்டடங்களை அவற்றின் தனித்துவம் மாறாமல் புனரமைத்து, பாதுகாக்கும் பொருட்டு இக்கட்டடங்களைச் சீரமைப்பதற்கு இவ்வாண்டு சிறப்பு ஒதுக்கீடாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம்மதிப்பீடுகளில் தமிழ் வளர்ச்சித் துறைக்கு 82.86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக்கூறினார்.
இதையும் படிங்க:பள்ளிக்கல்வித் துறைக்கு 36,895.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு