தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 14.5 லட்சம் மோசடி செய்த நிதித்துறை அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

By

Published : Jan 24, 2022, 10:25 PM IST

government officer arrested for employment scam
தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

சென்னை: வில்லிவாக்கம், சந்திரா பிளாட்ஸ் பெருமாள் காலனி மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் ராஜ முருகபாபு.

இவர் தனக்குத் தெரிந்த ஐந்து பேருக்கு அரசு வேலை வேண்டி தலைமைச் செயலகத்தில் நிதித்துறையில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் நிக்ஸன் என்பவரை அணுகி உள்ளார். அதுமட்டுமல்லாமல் ரூ. 14.5 லட்சம் பணத்தை, கடந்த 2018ஆம் ஆண்டு நிக்ஸனிடம் கொடுத்துள்ளார்.

இதன் பின்னர் நிக்ஸன் வேலை வாங்கித் தரவில்லை எனவும், கொடுத்த பணத்தை திருப்பித் தரவில்லை எனவும் ராஜ முருகபாபு கோட்டை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நிதித்துறை அலுவலக உதவியாளர்

கோட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணையில், நிக்ஸன் என்பவர் வேலை வாங்கி தருவதாகக் கூறி புகார்தாரரிடம் பணம் ரூ.14.5 லட்சம் பெற்று, வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்தது உண்மையென தெரியவந்தது.

அதன்பேரில் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த நிக்ஸனை கோட்டை காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட நிக்ஸன் தலைமைச்செயலகத்தில் பணிபுரிவதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, புகார்தாரருக்கு அறிமுகமான 5 நபர்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் ரூ.14.5 லட்சம் பெற்று ஏமாற்றியது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட நிக்ஸன் விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த மோசடியில் தொடர்புடைய வருவாய்த் துறை பிரிவு அலுவலர் கோமதி என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிக்ஸன் மேலும் பலரிடம் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகித்துள்ளனர். அதனால் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த கோட்டை காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஆன்லைன் தேர்வு: மாணவர்களின் உயர் கல்வியைப் பாதிக்கும் - கல்வியாளர் ஜெயபிரகாஷ்காந்தி

ABOUT THE AUTHOR

...view details