இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாட்டில் கரோனா பரவலையடுத்து அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகளுக்கு மட்டும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசின் பல்வேறு துறை பணியாளர்கள், தலைமைச் செயலக, உயர் நீதிமன்ற ஊழியர்கள் பணிக்கு வர ஏதுவாக, தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், முன்னர் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட்டுவந்த அனைத்து தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் தற்போது 75 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.