சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ், வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்துள்ளார். இந்நிலையில், கடந்த 2015 ஜூன் 23ஆம் நாள் இருவரும் கோயிலுக்குச் சென்றபோது, அங்கு கோகுல்ராஜ் மாயமாக்கப்பட்டார்.
இதுதொடர்பாக, திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜின் ஆட்கள் கோகுல்ராஜை கடத்தியதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் பாதை அருகே கோகுல்ராஜ் பிணமாக மீட்கப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக யுவராஜ் உட்பட 17 பேர் மீது நாமக்கல் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கின் எட்டாவது குற்றவாளியான சதீஷ் குமார் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என் பிரகாஷ், இவர் மீதான குற்றச் செயலுக்கு முகாந்திரம் இருப்பதாகக் கூறி சதீஷ்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.