சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுசில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சமூக வலைதளங்களில் புகார் எழுந்த நிலையில், மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிவசங்கர் பாபா மீது 3 புகார்கள் அளிக்கப்பட்டு போக்சோ சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.
சிவசங்கர் பாபா மீது போக்சோ வழக்கு
இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி கடந்த 13ஆம் தேதி டிஜிபி திரிபாதி உத்தவிட்டார். மாணவிகள் மூலம் பெறப்பட்ட மூன்று புகார்களின் அடிப்படையில் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீதான போக்சோ வழக்கு உள்ளிட்ட மூன்று தனித் தனி வழக்குகளை மூன்று தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதி
சிவசங்கர் பாபா உடல்நலக் குறைவு காரணமாக டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக அவர் தரப்பில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் கடந்த 11ஆம் தேதி சிவசங்கர் பாபா தரப்பில் ஆஜரான சுசில் ஹரி பள்ளி நிர்வாகி ஜனனி தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில் சிபிசிஐடி காவல் துறையினரின் தனிப்படையொன்று டேராடூனுக்கு நேற்று விரைந்தும், மற்ற இரு குழுக்கள் சுசில் ஹரி பள்ளிக்கு நேரடியாகச் சென்றும், புகார் அளித்த மாணவிகளிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றும் சிவசங்கர் பாபா-விற்கு எதிரான முக்கிய ஆதாரங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஏற்கனவே சிவசங்கர் பாபா வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிடாமல் இருக்க அவருக்கு நேற்றைய தினமே லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
தேடுதல் வேட்டையில் சிபிசிஐடி
இந்நிலையில் டேராடூனுக்குச் சென்ற சிபிசிஐடி தனிப்படையினர் மூலம் சிவசங்கர் பாபா டேராடூன் தனியார் மருத்துவமனையில் இல்லை என்ற தகவல் தெரியவந்தது. இதனையடுத்து அவர் தப்பியோடி இருக்கலாம் என்ற அடிப்படையில் சிபிசிஐடி காவல் துறையினர் டேராடூன், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.