எம்பி சீட் மற்றும் மத்திய அரசுப்பணிகளில் முக்கிய வேலை வாங்கித்தருவதாகக் கூறி, கர்நாடகாவைச் சேர்ந்த கும்பல் பல கோடி மோசடியில் ஈடுபடுவதாக சிபிசிஐடி போலீசாருக்கு புகார்கள் வந்தன. மேலும் மத்திய அரசு அலுவலகத்தில் வேலை கிடைத்தது போல பிரதமர், ஆளுநர் அலுவலக இ-மெயில் போன்ற போலி இ-மெயில்களை உருவாக்கி, அதிலிருந்து போலியான நியமன ஆணையை அந்த மோசடிக் கும்பல் அனுப்பியுள்ளது. இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட மைசூரைச் சேர்ந்த மகாதேவய்யா (54), அவரது மகன் அங்கித் (29) மற்றும் ஓசூரைச் சேர்ந்த ஓம் (34) ஆகிய மூவரையும் சிபிசிஐடி தனிப்படையினர் அதிரடியாக கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மகாதேவய்யாவின் இ-மெயில்கள் சோதனை செய்யப்பட்டு, பிரதமர், ஆளுநர் அலுவலகம் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களில் இருந்து அனுப்பப்பட்டது போன்ற போலிக்கடிதங்கள் அனைத்தையும் சிபிசிஐடி பறிமுதல் செய்துள்ளது. அந்த ஆவணங்களில் உள்ள உயரதிகாரிகளின் கையெழுத்து குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக, பிரதமர் மற்றும் ஆளுநர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பான ஆவணங்கள், அச்சு அசலாக போலியாக எவ்வாறு தயாரிக்கப்பட்டன என்பது குறித்த விசாரணையை சிபிசிஐடி தீவிரப்படுத்தியுள்ளது. அதில், பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிந்த இரண்டு ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இம்மோசடியில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. மகாதேவய்யா மற்றும் அவரது உறவினர்களின் 17 வங்கிக் கணக்குகளை முடக்கி ஆய்வு செய்ததில், குறிப்பிட்ட இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் வங்கிக்கணக்கிற்கு பணம் சென்ற ஆவணங்கள் கிடைத்துள்ளன. அதில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி பிரதமரின் நேரடி உதவியாளராக பணிபுரிந்ததும் தெரிய வந்துள்ளது. மத்திய அரசுத்துறைகளில் இவர்கள் மூலம், சிலர் பதவி உயர்வு பெற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இ-மெயில்களில் இருந்து கிடைக்கப்பெற்ற போலி அரசு முத்திரை உள்ள கடிதங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, அதில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் நபர்களை பட்டியலிட்டு விசாரணை செய்யும் நடவடிக்கையில் இறங்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில், கைது செய்யப்பட்ட மோசடிக் கும்பலிடம் விசாரணை நடத்த ஏதுவாக, 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலிசார் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க:#MeToo மீ டூ விவகாரம்: அவதூறு வழக்கில் பத்திரிகையாளர் பிரியா ரமணி விடுவிப்பு