சென்னை:தமிழ்நாடு அரசின் பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் மகள் சத்ரியா கவின் இந்திய அளவில் குடிமைப்பணி தேர்வில் 244ஆவது இடத்தைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பிகாம் ஹானர்ஸ் படித்த 23 வயதான சத்ரியா கவின் மூன்றாண்டு தொடர்ந்து இந்திய குடிமைப்பணி தேர்விற்காக தினமும் 10 மணி நேரம் பயிற்சி செய்து தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவரின் தந்தை ஜெகநாதன் இந்திய ஆட்சிப்பணியில் பணிபுரிந்து வருகிறார். பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்த பொழுது மக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். தனது தந்தை மக்களுக்கு செய்யும் பணிகளை போல் தானும் சேவை செய்ய வேண்டும் என எண்ணிய சத்ரியா கவின் இளங்கலை படிப்பை முடித்தவுடன் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவை கடின முயற்சியால் வெற்றி கண்டுள்ளார்.
இதுகுறித்து இந்திய குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்ற சத்ரியா கவின் கூறும்போது, "நான் ஐஎஃப்எஸ் படிக்க வேண்டுமென விரும்பியதற்கு காரணம் மக்களிடம் அரசாங்கம் சரியாக செயல்படுவதில்லை என்ற எதிர்மறையான கருத்து நிலவி வருகிறது. தங்களுக்கு தேவையானவற்றை மீண்டும் மீண்டும் சென்று கேட்க வேண்டுமென எண்ணுகின்றனர். மக்களை மையமாகக் கொண்டு அரசாங்கம் செயல்படுவதுதான் சிறப்பாக இருக்கும் எனவே இதனை மாற்றுவதற்கு தானும் உதவியாக இருப்பேன் எனக் கருதி தான் ஐஏஎஸ் தேர்விற்கு படித்தேன்.
மக்களுக்கு மேலிருந்து திட்டங்களை தீட்டுவதை விட மக்களுக்கு என்ன தேவை என்பதை கண்டறிந்து அதற்கேற்ப திட்டங்களை வகுத்து செயல்படுத்தினால் அவர்களை சென்றடையும் என்பது தான் என்னுடைய நோக்கம். ஐஏஎஸ் தேர்வில் மூன்று நிலைகள் உள்ளன. ஒவ்வொரு நிலைக்கான தேர்விற்கும் ஒவ்வொரு மாதிரி தயாராக வேண்டும். தொடர்ந்து ஆர்வமுடன் படித்தால் வெற்றி பெறலாம். இந்தத் தேர்வில் அதிர்ஷ்டம், மாய மந்திரம் மூலமோ தேர்ச்சி பெற முடியாது. உங்களை நம்பி கடினமாக உழைத்தால் நிச்சயம் தேர்ச்சி பெற முடியும்.