ஹைதராபாத்: 11 மார்ச் 1994, இந்திய நீதித்துறை தனது வரலாற்றுப் பக்கங்களில் முக்கியத்துவம் வாய்ந்த அத்தியாயத்தைத் தீர்ப்பாக எழுதிய தினம் அது. அதுவரை மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுகளுக்கு மறுக்கப்பட்டு வந்த, ஜனநாயக அரசியல் சாசன உரிமையை நிலை நிறுத்திய தீர்ப்பை ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கியது.
தமிழ்நாட்டின் தற்போதைய இளைய தலைமுறையினரில் பெரும்பாலோனோர் "குடியரசுத் தலைவர் ஆட்சி" என்பதைப் பார்த்திராதவர்கள். காரணம், கடைசியாக தமிழ்நாடு குடியரசுத் தலைவர் ஆட்சியில் இருந்தது 1991ஆம் ஆண்டில்தான். 30 ஆண்டுகளாக குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கண்டிராத தமிழ்நாட்டில், அதற்கு முந்தைய 20 ஆண்டுகளில், மக்களால் தேர்வு செய்யப்பட்டு பெரும்பான்மையுடன் இருந்த மூன்று அரசுகள், அன்றைய மத்திய அரசுகளால் கலைக்கப்பட்டன.
தனக்கு உவப்பில்லாத மாநில அரசுகளை அரசியல் சட்டம் 356 என்ற பிரம்மாஸ்திரத்தைக் கொண்டு, மத்திய அரசுகள் கவலையின்றி கலைத்துவந்த காலக்கட்டம் அது. மத்திய அரசின் இந்த பிரம்மாஸ்திரத் தாக்குதலில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.
1994இல் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புதான் 356 அரசியல் சட்டத்திற்கு கடிவாளம் போட்டது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுகளை மத்திய அரசு தான்தோன்றித்தனமாக கவிழ்க்க முடியாது எனவும், பெரும்பான்மை என்பது சட்டப்பேரவையில் வாக்கெடுப்பின் வாயிலாக முடிவு செய்வதே தவிர, மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் அல்ல என்று தீர்ப்பளித்து மத்திய அரசின் அதிகாரத்தை அளவை வரையறுத்து, மாநில அரசின் உரிமையை நிலைநாட்டியது உச்ச நீதிமன்றம்.
இந்த வரலாற்றுக் கதை ஏன் முக்கியம் என்றால், 90கள் வரை தமிழ்நாடு, உறவுக்குக் கை கொடுத்ததை விட உரிமைக்குக் குரல் கொடுத்ததுதான் அதிகம். மற்ற இந்திய மாநிலங்களை விட கூட்டாட்சித் தத்துவத்திற்கான குரல் ஓங்கி ஒலித்தது, ஒலித்து வருவது தமிழ்நாட்டிலிருந்துதான்.
1967வரை மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியிலிருந்தது. 67இல் திமுகவின் வெற்றிக்குப் பின்னர்தான், தமிழ்நாட்டு அரசுக்கும் மத்திய அரசுக்கும் ஆடுபுலி ஆட்டம் தொடங்கியது. அன்றைய காங்கிரஸ் அரசின் இந்தித் திணிப்பு எதிர்ப்பு பின்னணியில் 67இல் ஆட்சியை அமைத்த அண்ணாதுரை, இந்தியாவில், மாநில உரிமைக்கான குரலின் ஊற்றுக் கண்ணாகத் திகழ்ந்தார்.
"ஆட்டுக்குத் தாடி எப்படி தேவையில்லையோ, அப்படித்தான் நாட்டிற்கும் ஆளுநர்" என்றார் அண்ணா. முதலமைச்சராகப் பதவியேற்ற இரண்டாண்டுகளிலேயே அண்ணா அகால மரணமடைய, அவரது வழித்தோன்றலான கருணாநிதி மாநில உரிமை முழக்கத்தை அடுத்தத் தளத்திற்குக் கொண்டு சென்றார்.
மத்திய - மாநில உறவு குறித்து ஆராய நாட்டிலேயே முதல்முறையாக குழு ஒன்றை அமைத்தவர் கருணாநிதிதான். முதலமைச்சராகப் பதவியேற்ற முதல் ஆண்டான 1969இல் மத்திய-மாநில உறவு குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ராஜமன்னார் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். அந்த குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் 1974ஆம் ஆண்டு "மாநில சுயாட்சி" தீர்மானத்தை தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றினார்.
அடுத்தாண்டே இந்தத் தீர்மானத்திற்கு அறைகூவல் விடுக்கும்விதமான நடவடிக்கையை அன்றையப் பிரதமர் இந்திரா காந்தி மேற்கொண்டார். 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி நாடு முழுவதும் அவசர நிலையைப் பிரகடனப்படுத்திய இந்திரா காந்தி, அனைத்து மாநில அரசுகளும் அவசர நிலையின் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். நாடு முழுவதிலும் இந்திரா எதிர்ப்பாளர்கள் ஒடுக்கப்பட்டனர். செய்தி ஊடகங்கள் தணிக்கை செய்யப்பட்டு, சர்வாதிகாரத்திற்கு எதிராகவும் ஜனநாயகத்திற்கு ஆதரவாகவும் குரலெழுப்பியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சர்வாதிகாரத்திற்கு அடிபணியாமல் அவசர நிலையை எதிர்த்த அன்றைய முதலமைச்சர் கருணாநிதியின் தலைமையிலான தமிழ்நாடுதான் அவசர நிலையால் பாதிக்கப்பட்ட வட இந்தியத் தலைவர்கள் உள்ளிட்ட பலருக்கும் அடைக்கலமாகவும் இருந்தது. அவசர நிலையை எதிர்த்ததன் காரணமாக 1976ஆம் ஆண்டில் கருணாநிதியின் அரசை டிஸ்மிஸ் செய்து தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்திய இந்திரா காந்தி, கருணாநிதியின் மகனும், இன்றைய திமுக தலைவருமான ஸ்டாலின் உள்பட பல திமுக தலைவர்களை மிசா (MISA-Maintenance of Internal Security Act)சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தார்.