தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து ஒரு மாதத்துக்குப் பின்னர் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் பல முறைகேடுகளுக்கு வழி வகுப்பதுடன், செலவும் ஏற்படுகிறது, எனவே வாக்குப்பதிவு முடிந்தபின், அந்தந்த வாக்குச்சாவடிகளில் வாக்கு எண்ணிக்கையை நடத்த உத்தரவிடக் கோரி குமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, செந்தில்குமார் ராம்மூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (மார்ச் 25) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவழிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.
இதையடுத்து, தேர்தல் ஆணையத்துக்கு ஆலோசனைகளும், யோசனைகளும் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்தனர்.
மேலும் தேர்தல் ஆணையம் தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடும் வகையில் வழக்குகள் தொடர வேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், நீதிமன்றங்களில் வழக்குகளை எதிர்கொள்வதை விடுத்து, தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட தேர்தல் ஆணையத்தை அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
இதேபோல, தேர்தலை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் மார்ச் 22ஆம் தேதி முதல் தேர்தல் நாள் வரை மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கறிஞர் சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி அமர்வு, தேர்தலை நடத்தும் பணிகளில் இருந்து தேர்தல் ஆணையத்தின் கவனத்தை திசை திருப்பும் வகையில், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
சட்டப்படி, தேர்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன் மதுக்கடைகள் மூடப்படவேண்டும் எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், வேண்டுமானால் மனுதாரரும், அவரைச் சார்ந்தவர்களும் மதுபானக் கடைகளை தவிர்க்கலாம் எனவும் தெரிவித்தனர்.
தேர்தல் ஆணையத்தை அதன் பணியைச் செய்யவிடுங்கள்!
சென்னை: வாக்குப்பதிவுக்கு இரு வாரங்கள் உள்ள நிலையில், தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடும் வகையில் வழக்குகள் தொடராமல், தேர்தல் ஆணையத்தை அதன் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Election commission
Last Updated : Mar 25, 2021, 5:21 PM IST