தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெண்கள் குறைந்தபட்ச திருமண வயது உயர்வு - வழக்கறிஞர்கள், மருத்துவர்களின் அலசல் பார்வை!

பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது உயர்வின் சாதக பாதகங்கள் குறித்து மூத்த வழக்கறிஞர்கள் வில்சன், அருள்மொழி, மருத்துவர் விஜயா ஈடிவி பாரத் செய்திகளுக்கு தங்களின் பிரத்யேக கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

திருமண வயது
திருமண வயது

By

Published : Oct 28, 2020, 10:57 AM IST

நாட்டின் 74வது சுதந்திர தினத்தில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்த மத்திய அரசு பரிசீலிப்பதாகத் தெரிவித்தார். பெண்களின் பிரசவ கால இறப்பு, குழந்தை மரணம், குழிந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றை தவிர்க்க பெண்களின் திருமண வயதை அதிகரிக்க, மத்திய அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18இல் இருந்து 21 ஆக அதிகரிப்பது தொடர்பான முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான வில்சன் கூறுகையில், சட்டரீதியாக பெண்களின் திருமண வயதை அதிகரிப்பதால், சுயமாக சிந்தித்து தங்கள் திருமணத்தை தாமே முடிவு செய்யும் அதிகாரம் பெண்களுக்கு கிடைக்கும்.

வழக்கறிஞர்கள், மருத்துவர்களின் அலசல் பார்வை

ஆனால் திருமண வயதை அதிகரிப்பதால் நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளை முழுமையாகத் தடுத்து விட முடியாது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்களை அமல்படுத்திய பின், திருமண வயதை அதிகரிப்பதால் மட்டுமே இது பெண்களுக்கு சாதகமாக இருக்கும். இல்லை என்றால் இந்த மாற்றத்தால் எந்த நன்மையும் ஏற்படாது என தெரிவிக்கிறார்.

குறிப்பாக, இந்தியாவில் குழந்தை திருமணத்தைத் தடுக்கவும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கவும் திருமண வயது சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி பெண்களின் திருமண வயது 18 ஆகவும், ஆண்களின் திருமண வயது 21 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் மூலம், குழந்தை திருமணம் தடுக்கப்பட்டு பெண்கள் சிறு வயதில் தாய்மை அடைவது தடுக்கப்பட்டது.

உலகம் முழுவதும் ஒவ்வொரு நாடுகளும் குழந்தைகள் திருமணத்துக்கு எதிராக சட்டங்களை இயற்றியுள்ளன. இருப்பினும், உலகளவில் குழந்தைகள் திருமணம் நடைபெறும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமண வயதை அதிகரிப்பதால் பெண்களுக்கு ஏற்படும் மருத்துவ நலன்கள் குறித்து எழும்பூர் மகப்பேறு மருத்துமனை இயக்குநர் மருத்துவர் விஜயா கூறுகையில், திருமண வயதை 3 ஆண்டுகள் உயர்த்துவதால் உடல் வளர்ச்சியின் காரணமாக பெண்களின் பிரசவகால உயிரிழப்புகளை குறைக்க முடியும், ஆரோக்கியமான குழந்தைகளை பெற முடியும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

கடந்த 2019இல் 1 லட்சம் பெண்களில் 130 பேர் பெண்கள் பிரசவத்தின் போது இந்தியாவில் இறந்துள்ளனர் என புள்ளிவிவரம் கூறுகிறது. தமிழகம் மற்றும் கேரளவில் இந்த உயிரிழப்பு 1 லட்சம் பெண்களில் 60 முதல் 70 ஆக இருப்பதால், உயிரிழப்புகளை குறைக்க கட்டாயம் பெண்களின் திருமண வயதை அதிகரிக்க வேண்டும் என்கிறார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பதன் காரணமாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பதே குழந்தைகள் திருமணம் அதிகரிக்க காரணமாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்தியாவில் 16 சதவிகித வளர் இளம்பெண்கள் 16 முதல் 19 வயதுக்குள் திருமணம் செய்ய பெற்றோர்களாலும், சமுதாயத்தாலும் சூழ்நிலையாலும் கட்டாயப்படுத்தப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு கொண்டுவரும் இப்புதிய மாற்றம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என மூத்த வழக்கறிஞர் அருள்மொழி கூறுகையில், பெண்களின் திருமண வயதை 21 ஆக அதிகரிப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க போதுமான சட்டங்கள் இல்லை.

இருக்கும் சட்டங்களும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாததால் திருமண வயதை அதிகரிப்பதால் அதிக பாதிப்புகள் ஏற்படும். அதனால், வலுவான சட்ட மாற்றங்களையும், இளைஞர்களிடம் சமுதாய மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கிறார். திருமண வயது உயர்வு தொடர்பான அறிவிப்புக்கு நிபுணர்கள், ஆர்வலர்கள் வரவேற்பு தந்தாலும், பெண்களின் பாதுகாப்பு நலன்களை மேம்படுத்த பலமான சட்ட வழிமுறைகளை தயார் செய்து அதை நடைமுறைபடுத்த வேண்டும் என்பதே கூடுதல் எதிர்பார்ப்பாகவுள்ளது.

இதையும் படிங்க:மூன்று வேளாண் மசோதாக்கள் குறித்து நிபுணர் ஆத்ரேயாவின் அலசல் பார்வை!

ABOUT THE AUTHOR

...view details