தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவ மழை பெய்து வருவதால் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி ஏரி, அதன் கொள்ளளவான 140 அடியை எட்டியது. இதனிடையே, ஆந்திராவின் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்படும் கிருஷ்ணா நதி நீர் 1000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் பூண்டி ஏரியின் உபரி நீரை செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில், அனைத்து ஏரிகளும் அதன் கொள்ளளவை எட்டியதால், ஆந்திராவின் நீர் பாசன அலுவலர்களை தொடர்பு கொண்ட தமிழ்நாடு பொதுப்பணி துறை அலுவலர்கள், கிருஷ்ணா நதியில் இருந்து திறந்து விடப்படும் நீரை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.
இது குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய செயற்பொறியாளர் (கிருஷ்ணா நதி நீர், பூண்டி ஏரி), ஜார்ஜ், ஆந்திர அணையிலுருந்து கிருஷ்ணா நதியின் உபரி நீர் கண்டலேறு-பூண்டி கால்வாய் வழியாக பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது என்றார். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், ஆந்திர அலுவலர்களை தொர்பு கொண்டு கிருஷ்ணா நதி நீரை நிறுத்துமாறு வலியுறுத்தியதாக குறிப்பிட்ட அவர், தற்போதைய நிலவரப்படி பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 675 கன அடி நீர் வந்துகொண்டிருப்பதாகவும், அணையிலிருந்து 675 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதாகவும் தெரிவித்தார்.