ஊரடங்கால் பாதிப்புக்குள்ளான ஏழை மக்களுக்கு உதவ 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தைத் திமுக தொடங்கி செயல்படுத்திவருகிறது. இந்நிலையில், இத்திட்டம் குறித்து இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ”ஒன்றிணைவோம் வா திட்டம் மூலம் இதுவரை 15 லட்சம் அழைப்புகளைச் சரிபார்த்து, தேவையானவர்களுக்கு உதவிகளைச் செய்துள்ளோம்.
மேலும், வீடு இல்லாதவர்கள், சமையல் செய்து சாப்பிடக்கூட வழியில்லாதவர்களுக்கு உணவுகளைத் தயாரித்து 16 லட்சம் பேருக்கு உணவு வழங்கியிருக்கிறோம்.
அதேபோல் இத்திட்டம் மூலம் மக்கள் நமக்கு 15 லட்சம் கோரிக்கைகள் வரை வைத்துள்ளனர். அதனைவைத்துப் பார்க்கும்போது அரசு செயல்படவே இல்லை என்பது தெரிகிறது. அரசும், அரசுப் பதவியில் உள்ளவர்களும் மக்களுக்கான கடமையைச் செய்யும் பொறுப்பிலிருந்து தவறக் கூடாது.
இதன் தொடர்ச்சியாக எங்களிடம் வரும் கோரிக்கைகளை இணையத்தின் மூலமாக அரசின் கவனத்திற்கு கொண்டுசேர்க்கப் போகிறோம். அதாவது, அரசை மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிமடுத்து செயல்படவைக்கப் போகிறோம்.
அரசை திமுக செயல்பட வைக்கும் - மு.க. ஸ்டாலின் நானே முதலமைச்சர் அலுவலகத்துக்கு அந்த மனுக்களை அனுப்பப்போகிறேன். அவர் அதனைக் கண்டுகொள்ளவில்லை என்றால், ஐந்து பேர் கொண்ட குழு அமைத்து தலைமைச் செயலருக்கு இந்தக் கோரிக்கை மனுக்களை அனுப்பி வைக்கப்போகிறோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: செவிலியருக்கு டிடிவி தினகரன் ட்விட்டர் வாழ்த்து