இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊரடங்கை மீண்டும் நீட்டித்து முதலமைச்சர் பழனிசாமி, நேற்று (ஆகஸ்ட் 30) வெளியிட்டுள்ள அறிக்கையில், பொய்களையும் புரட்டுகளையும் பட்டியலிட்டு சுமார் 6 மாத கால மக்களின் வேதனைகளையும், சோதனைகளையும் மிகவும் குறைத்து மதிப்பிட்டு, எள்ளி நகையாடியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையைப் பெற முடியவில்லை; கரோனா பேரிடருக்காகக் கேட்ட எந்த நிதியுதவியையும் மத்திய அரசிடமிருந்து பெற இயலவில்லை; கண்துடைப்பு நாடகமாக கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி முதலீடுகள் வரவில்லை; நிதி நிலைமையில் மூச்சுத் திணறி, நிதி நிர்வாகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்பதை மறைத்து அபாண்டப் பொய்களை அள்ளி வீசியிருக்கிறார்.
வேலைவாய்ப்பின்மையே இல்லை என்றும் தனிநபர் வருவாய் படிப்படியாக உயர்ந்து வருகிறது என்றும் கொஞ்சம் கூட நாகரிகமின்றி பொய் சொல்லி, வேலை இழந்து வருமானம் இழந்து தவிப்போரை எள்ளி நகையாடியிருக்கிறார். மேலும், தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது என்று, 4 லட்சத்து 22 ஆயிரத்து 85 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நாளில் சொல்வதற்கு, உண்மையிலேயே முதலமைச்சருக்கு அசாத்திய துணிச்சல் இருக்க வேண்டும்.