இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், தமிழ்நாட்டு வரலாற்றிலே சிறப்பான ஆட்சி தந்தது அ.தி.மு.க.தான் என்று கற்பனைக் கதை ஒன்றை சொல்லியிருக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. ஊழலுக்காக முதலமைச்சரே ஜெயிலுக்குப் போனதும், முதலமைச்சர் மீதே சொத்துக் குவிப்பு வழக்கு வந்ததும் அ.தி.மு.க. ஆட்சியில்தான். இதுவரை, அக்கட்சியின் சார்பாக நான்கு முதலமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள். அதில் ஒரு முதலமைச்சர் சொத்துக் குவிப்பு வழக்கில் கைதானவர், பிறகு சிறையும் சென்றவர். மீதியுள்ள இரண்டு முதலமைச்சர்களான எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சொத்துக் குவிப்புப் புகாரில் சிக்கியுள்ளவர்கள்; நீதிமன்றத்தின் தண்டனையைப் பெற வேண்டியவர்கள் என்பதை ஏனோ எடப்பாடி பழனிசாமி மறந்து விட்டார்.
ஊழலுக்காக முதலமைச்சரே ஜெயிலுக்குப் போனது அதிமுக ஆட்சியில்தான் - துரைமுருகன்
திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து பேசுவதை கண்டிக்கும் விதமாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தேர்தலில் எதிரிகளை ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும் என்று வீராப்பு பேசியிருக்கும் முதலமைச்சர் பழனிசாமிக்கு நான் ஒரேயொரு தகவலை மட்டும் தெரிவிக்கிறேன். ஏனென்றால் அந்தத் தகவலை இன்னும் உங்களுக்கு உளவுத்துறை கூட சொல்லியிருக்க மாட்டார்கள். பத்தாண்டு ஊழல் ஆட்சிக்கு, நீங்கள் தமிழக மக்களுக்குக் கொடுத்துள்ள தொல்லைகளுக்கு, இன்னல்களுக்கு “ போதும் உங்கள் சகவாசம்” என தங்களது வாக்குகள் மூலம் “உங்களை ஓட ஓட விரட்டி அடிக்க” மக்கள் தயாராகி விட்டார்கள். அதுவரை பழனிசாமி அவர்களே என்ன பொய் வேண்டுமானாலும் சொல்லுங்கள். மக்கள் நம்பத் தயாராக இல்லை! முதல் தேர்தல் பரப்புரை கூட்டத்திலேயே சாதனைகளைச் சொல்ல முடியாமல் திணறியுள்ள முதலமைச்சர் பழனிசாமி, அடுத்தடுத்த கூட்டங்களிலும் திக்குமுக்காடப் போகிறார் என்பது மட்டும் நிச்சயம்.
திமுக செய்துள்ள சாதனைகளின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளாமல், கழகத்தையோ, எங்கள் தலைவரையோ விமர்சிக்க ஊழல் மலைமீது அமர்ந்திருக்கும் முதலமைச்சர் பழனிசாமிக்கோ அவரது அமைச்சரவை சகாக்களுக்கோ அருகதை இல்லை என குறிப்பிட்டுள்ளார்.