தமிழ்நாடு

tamil nadu

நெஞ்சில் பல்கலைக்கழகமாக நிலைத்திருக்கும் நாவலர் - ஸ்டாலின் அறிக்கை

By

Published : Jul 11, 2019, 9:22 PM IST

சென்னை: நெஞ்சத்தில் என்றும் நிலைத்திருக்கும் நடமாடும் பல்கலைக்கழகம்தான் நாவலர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

stalin

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திராவிட இயக்கத்தின் சமூக நீதி லட்சியத்தை நெஞ்சில் ஏந்தி, தந்தை பெரியாரின் பகுத்தறிவுத் தெளிவுடனும் பேரறிஞர் அண்ணாவின் தமிழ் மொழிப் பற்றுடனும் - தலைவர் கலைஞர் அவர்களுடனான இயக்க உறவுடனும் தொடர்ந்து பயணித்தவரான நாவலர் நெடுஞ்செழியனுக்கு நூற்றாண்டு விழா என்பது திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அனைவருக்கும் தேனென இனிக்கின்ற செய்தியாகும்.

திராவிடர் கழகத்திலிருந்து, இரட்டைக் குழல் துப்பாக்கியாக உருவான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்கத்தில் அதன் வளர்ச்சியிலும், பேரறிஞர் அண்ணாவிற்கு உறுதியான நம்பிக்கையாகவும் விளங்கியவர் நாவலர். திராவிட இயக்கப் பேச்சுக் கலையில் ‘நாவலர் பாணி’ என்று அடையாளப்படுத்தும் வகையில், அவருடைய சொற் பெருக்கு அமைந்திருந்தது. அவர் நடத்திய “மன்றம்” இதழ், திராவிட இயக்கப் படைப்பாயுதங்களில் ஒன்றாக விளங்கியது.

1956இல் திருச்சி மாநில மாநாட்டில், அண்ணா அவர்களால் மாலை சூட்டப்பட்டு, கழகக் கொடியேற்றி, மாநாட்டுத் தலைமை தாங்கிய நாவலரை மேடையில் பேரறிஞர் அண்ணா விளித்தபோது, “தம்பி வா.. தலைமையேற்க வா.. உன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறோம்” எனச் சொன்ன வார்த்தைகள், நாவலரின் அரசியல் வரலாற்றில் மைல்கல்லாக அமைந்தன. மும்முனைப் போராட்டம், விலைவாசி உயர்வுப் போராட்டம், இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் என கழகத்தின் போராட்டக் களங்களில் அண்ணாவுக்குத் துணையாக நின்றவர் நாவலர்.

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, உள்கட்சி ஜனநாயகத்தின் அடிப்படையில் கழகத்தில் தலைவர் தேர்வு நடைபெற்றபோது, தலைவர் கலைஞருக்கும் நாவலருக்கும் இடையிலான உணர்வுகள் எப்படிப்பட்டவை என்பதை நெஞ்சுக்கு நீதியில் தலைவர் கலைஞர் அவர்கள் விரிவாக எடுத்துரைத்திருக்கிறார். நாவலர் அவர்கள் மறைவெய்தியபோது, அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு, திராவிடக் கொள்கை உணர்வுடன் அவரது இல்லம் சென்று, தனது மூத்த சகோதரருக்கு வீரவணக்கம் செலுத்தினார் தலைவர் கலைஞர்.

திராவிட இயக்க வரலாற்றில் தனித்த புகழையும், தகுதி மிகுந்த அடையாளத்தையும் கொண்டுள்ள நாவலர் அவர்களின் நூற்றாண்டில் அவரது பெருமைகளை நினைவுகூர்வோம். சமூகநீதி, சுயமரியாதை ஆகிய இலட்சியங்களைக் காக்கும் பயணத்தை வாழும் நாள் முழுதும் தொய்வின்றித் தொடர்ந்து மேற்கொள்ள சூளுரைப்போம் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details