கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ஏழை மக்களுக்கு உணவு, அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அரசியல் கட்சிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் வழங்குவது, 144 தடை உத்தரவுக்கு எதிரானது எனக்கூறி சென்னை மாநகராட்சி ஆணையர் தடை விதித்து உத்தரவிட்டார். பின்னர் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தடை விதிக்கப்படவில்லை என்றும் கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து திமுக, காங்கிரஸ், மதிமுக சார்பில் பொது நல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அதில், பாதிக்கப்பட்டுள்ள ஏழை மற்றும் தினக்கூலிகளுக்கு உதவும் வகையில் உணவு, அத்தியாவசிப் பொருட்களை வழங்கி வருவதாகவும், அப்போது முறையாக சமூக இடைவெளி, முகக் கவசம், கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வசதியானவர்களுக்கு ஆன்லைன் மூலம் பொருட்கள் கிடைக்க அனுமதி அளித்துள்ள அரசு, ஏழை மக்களுக்கு நேரடியாக உணவு பொருட்களை வழங்குவதை தடுக்கும் வகையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், 130 கோடி மக்களின் தேவையை அரசால் மட்டுமே முழுமையாக அளிக்க முடியாது என்றும், உதவி தேவைப்படுபவர்களுக்கு மக்கள் உதவிபுரிய வேண்டும் என பிரதமர் அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டினார்.