தமிழ்நாட்டில் தேர்தல் தேதி நெருங்க நெருங்க திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்திவருகின்றன. தங்கள் பரப்புரையின் முக்கிய ஆயுதமாக தேர்தல் விளம்பரங்களைக் கையில் எடுத்துள்ள இரு கட்சிகளும் போஸ்டர்களாகவும், சமூக வலைதளப் புகைப்படங்களாகவும் அவற்றை பரப்பிவருகின்றன.
தங்கள் தேர்தல் அறிக்கைகளை காப்பி அடித்துவிட்டதாக இரு கட்சிகளும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களைக் கூறிவரும் நிலையில், தற்போது இரு கட்சி போஸ்டர் விளம்பரத்திலும் ஒரே பெண்மணியின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் கட்சியின் தொலைநோக்குத் திட்ட அறிக்கையை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து அக்கட்சியின் ஐ.டி விங்க் அந்த அறிவிப்பை டிஜிட்டல் போஸ்டராக மாற்றி, புடவை அணிந்த பெண்ணை மாடலாக வைத்து வெளியிட்டது.
அடுத்த சில நாட்களில் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட, அந்த அறிவிப்பின் போஸ்டரிலும் அதே பெண்ணின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டது. இந்த விளம்பரப் படங்கள் சமூக வலைதளங்களில் பரவியநிலையில், தேர்தல் அறிக்கையை மட்டுமல்ல, நாங்கள் பயன்படுத்தும் புகைப்படங்களைக்கூட காப்பியடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டை திமுக தரப்பு முன்வைத்தது.