வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், புத்தகங்கள் கிடைக்க தாமதம் ஏற்படும் என்பதாலும் பள்ளிகள் மறு திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், உயர்நிலை, மேல்நிலை, சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ பள்ளிகள் மாநில சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது, “அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் வெயிலின் தாக்கம் இன்னும் குறையாமல் உள்ளது. மேலும், ரம்ஜான் விடுமுறையும் அடுத்த வாரத்தின் நடுவில் வருகிறது. பத்தாம் தேதிக்கு மேல்தான் புதிய புத்தகங்கள் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. எனவே புத்தகங்கள் இன்றி பாடம் நடத்துவதும் பாதிக்கப்படும். இது தவிர ஜுன் 8, 9 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறவுள்ளது. இதில் தனியார் பள்ளி, அரசு பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்கள் படிப்பதற்கும் தேர்வு எழுதுவதற்கும் விடுப்பு எடுத்துள்ளதால் மாணவர்களை பாதுகாப்பது, பாடம் நடத்துவது உள்ளிட்ட செயல்பாடுகள் பாதிக்கப்படும்.