தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், குறைந்தபாடில்லை. அதனால், சமூக ஆர்வலர்களும், குழந்தை மற்றும் பெண்கள் பாதுகாப்பு அமைப்புகளும், குழந்தைகளுக்கு எதிரான சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும் என வலியுறுத்திவருகின்றனர்.
தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் 2000-2010ஆம் ஆண்டுகளைவிட, 2010-2020ஆம் ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன.
தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள்:
- 2016 - 2,856 வழக்குகள்
- 2017 - 3,529 வழக்குகள்
- 2018 - 4,155 வழக்குகள்
- 2019 - 4,139 வழக்குகள்
சென்னையில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள்:
- 2016 - 230 வழக்குகள்
- 2017 - 249 வழக்குகள்
- 2018 - 775 வழக்குகள்
- 2019 - 731 வழக்குகள்
இந்தப் புள்ளிவிவரங்களின்படி, 2017ஆம் ஆண்டைவிட 2018ஆம் ஆண்டில் 15 விழுக்காடு குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 250 விழுக்காடு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன.
இது தொடர்பாகப் பேசிய குழந்தைகள் நல ஆர்வலர் ஆன்ட்ரூ சேசுராஜ், "குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க முதல் காரணம் வீட்டில் கணவன், மனைவி இருவரும் பணிக்குச் செல்வது. இருவரும் பணிக்குச் செல்லும் சூழலில், குழந்தைகளைத் தெரிந்தவர்கள், உறவினர்கள் வீட்டில் விடப்படுகின்றனர்.
அங்கு அவர்கள் கவனிக்கப்படுகிறார்களா? அவர்களுக்கு ஏதாவது தொந்தரவு உள்ளதா? என்பதைப் பற்றி கவனம் செலுத்துவது இல்லை.
அடுத்த காரணம் சமூகத்தில் வக்கிர சிந்தனை அதிகரித்துவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஆபாச படங்களை மக்கள் சி.டி., இணையதள மையங்களில் மட்டுமே பார்த்துக் கொண்டுவந்தனர். ஆபாச படங்கள் பார்த்தல் என்பது ஒரு வட்டத்திற்குள் சுருங்கியது. ஆனால், தற்போது அப்படியல்ல, நம் அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனில் எளிதில் பார்த்துவிட முடிகிறது.
அதுமட்டுல்லாமல், ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஆபாச நடிகர்கள் மட்டுமே நடித்து வெளியான காணொலிகளைப் பார்த்த காலம்போய், காணொலி பதிவுசெய்யும் சாதனம் வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் எடுக்கும் காணொலி இணையத்தில் பதிவேற்றம்செய்வது, சமூக வலைதளங்களில் தனிமையிலிருக்கும்போது எடுக்கப்படும் புகைப்படம், கணொலிகளை வெளியிடுவது.
இதுபோல பல காரணங்களால் பெண்கள், குழந்தைகளின் மீதான பார்வை தவறாக மாறுகிறது. குறிப்பாக குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 2010ஆம் ஆண்டுக்கு முன் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் மிகவும் குறைவு. ஆனால் தற்போது அதிகளவில் குற்றங்கள் பெருகிவிட்டன. மக்கள் வெளிப்படையாக குற்றச் சம்பவங்களைப் பதிவுசெய்வது, சில ஆண்டுகளில் தொடர்சியாக அதிகரித்துள்ளது.
குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களில் "குழந்தைகள் பராமரிப்பு காப்பகத்தில்" தங்கியிருக்கும் குழந்தைகள் மட்டும் விதிவிலக்கல்ல, 2018ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரப் பட்டியலில், தமிழ்நாட்டில் 1,647 குழந்தைப் பராமரிப்பு காப்பகம் உள்ளது. அதில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகளவில் உள்ளன. அவற்றில் 87 ஆயிரத்து 866 குழந்தைகள் உள்ளன.
சொல்லப்போனால், குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களில் ஐந்து விழுக்காடு குழந்தைகள் பராமரிப்பு காப்பகத்தில் நடக்கின்றன. இது மிகவும் வருத்தத்திற்குரியது. இந்தியாவில் உள்ள குழந்தை பராமரிப்பு காப்பகங்கள் "சிறார் நீதி சட்டத்தின்" கீழ் வரக்கூடியவை. இந்தக் காப்பகங்களுக்கு வரும் குழந்தைகள் ஏற்கனவே அடிமைகளாக, அநாதைகளாக இருந்து மீட்கப்பட்டவர்கள், அதன் காரணமாகவே அவர்களிடம் எளிதில் தவறாக நடந்துகொள்ளும் எண்ணம் ஏற்படுகிறது.
மொத்த குற்றச் சம்பவங்களில் 5 முதல் 10 விழுக்காடு காப்பகங்களில்தான் நடக்கிறது. குறிப்பாக அரசு சார்பில் மாவட்ட வாரியாக குழந்தைகள் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவைச் சேர்ந்தவர்கள், குழந்தைகள் காப்பகத்துக்கு நேரடியாகச் சென்று அவர்களுக்கு அனைத்து வசதிகளும் உள்ளனவா, தொந்தரவு ஏதேனும் இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். ஆனால் அது எந்தளவில் தற்போது நடைபெறுகிறது என்பது கேள்விக் குறியாக உள்ளது.
அதன் காரணமாக நான்கு மாதங்களுக்கு முன் நகர்ப்புற வார்டு அளவில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு அமைக்க வேண்டும் என அரசாணை வெளியிட்டப்பட்டது. ஆனால், அதுவும் ஆணையாக மட்டுமே உள்ளது. இந்தச் சட்டங்கள் செய்யப்பட்டாலே குற்றங்கள் குறையும். மேலும் பெற்றோர்கள், குழந்தைகள் சொல்லுவதை காது கொடுத்து கேட்க வேண்டும்.
'உனக்கு ஒன்றும் தெரியாது' எனக் குழந்தைகளின் பேச்சு தட்டிக்கழிக்கப்படுகின்றன. பெற்றோர்கள் கேட்கவில்லை என்றால் வேறு வழியை குழந்தைகள் தேடிச் செல்வர். அப்படி அவர்கள் அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் என நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு அமைந்துவிடுகிறது. அதன் விளைவு குற்றத்தில் முடிகிறது. எனவே பெற்றோர்கள் குழந்தைகளுடன் கட்டாயம் நேரத்தைச் செலவுசெய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர்கள் நியமிக்க கோரிய வழக்கு - அரசு பதிலளிக்க மதுரைக் கிளை உத்தரவு!