சென்னை:சென்னை மாநகராட்சியில் கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, வளசரவாக்கம் உள்ளிட்ட ஏழு மண்டலங்களின் குப்பைகளை அகற்றும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதால், அங்கிருந்த நிரந்தர தூய்மைப் பணியாளர்களை பிற மண்டலத்துக்கு மாற்றுமாறு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.
இதனால், மண்டலம் 14இல் பணிபுரிந்த 300க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்கள் மண்டலம் எட்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து 700க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை முன்னறிவிப்பின்றி மாநகராட்சி நிர்வாகம் பணியில் இருந்து நீங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சென்னை செங்கொடி சங்கம் சார்பில், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு பணி வழங்கக் கோரியும் சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன் தலைமையில் "தர்ணா போராட்டம்" காலை 11 மணிக்கு தெடங்கியது. இந்த தர்ணா போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறும் என செங்கொடி சங்கம் தெரிவித்துள்ளது.
போரட்டத்திற்கு இடையில் செய்தியாளர்களை சந்தித்த சௌந்தரராஜன், "சென்னை மாநகராட்சி விரிவடைந்து சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இங்கு தூய்மை பணி செய்யும் பணியாளர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்கிறது. பணிநிறைவு பணியாளர்களுக்கு பதிலாக ஒப்பந்த முறையில் பணியாளர்களை நிரப்பி வருகின்றனர். அவர்களுக்கு ரூ. 320 அல்லது ரூ. 340 கொடுத்து ஊதியம் வழங்கி மாநகராட்சி கொள்ளை அடித்து வருகிறது.