அரசியல் கட்சி தொடங்கப்போவதாக முதல்முறையாக தெளிவான நிலைப்பாடு ஒன்றை நடிகர் ரஜினிகாந்த் இன்று அறிவித்துள்ளார். தமிழ்நாட்டு அரசியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அக்கட்சி 2021ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என்றும், டிசம்பர் 31ஆம் தேதியன்று அது குறித்த முழுமையான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தமிழருவி மணியனை கட்சியின் மேற்பார்வையாளராகவும், அர்ஜுனமூர்த்தி என்பவரை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் ரஜினிகாந்த் அறிமுகம் செய்துவைத்தார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தாலும், அர்ஜுன மூர்த்தி யார்? என்ற கேள்வி பொதுமக்களிடமும், அவரது ரசிகர்களிடமும் எழுந்துள்ளது.
எழுத்தாளர், பேச்சாளர், காந்தியவாதி என தமிழருவி மணியன் தமிழ்நாடு மக்களால் பரவலாக அறியப்பட்டுள்ளார். ஆனால், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்ட அர்ஜுனமூர்த்தி யார்? தலைவருக்கு நிகரான தலைமை ஒருங்கிணைப்பாளர் எனும் முக்கிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட காரணம் என்ன? என்பதுதான் இப்போது விவாதமாக மாறியுள்ளது.
யார் இந்த அர்ஜுனமூர்த்தி ?
தமிழ்நாட்டின் புதுகோட்டை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ரா. அர்ஜுனமூர்த்தி (59). அவரது தந்தை பெயர் எல்.பி.ராமசாமி கவுண்டர்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்குகொண்ட எல்.பி.ராமசாமி கவுண்டர் மறைந்த புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் மகாராஜா ஸ்ரீ விஜயரகு நந்த தொண்டைமான் மற்றும் மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் இருவருக்கும் நெருங்கிய நட்பு கொண்டிருந்தவராவார். அந்த காலத்தில் மிகப் பிரபலமான ஜனதா சாலை என்ற போக்குவரத்து நிறுவனம் எல்.பி.ராமசாமி கவுண்டரால் தோற்றுவிக்கப்பட்டதாகும்.
இந்திய அளவில் நன்கு அறியப்பட்ட தொழில்முனைவோராக இருக்கும் அர்ஜுன மூர்த்தி வர்த்தகம், உற்பத்தி, தொலைத் தொடர்பு போன்ற பல்வேறு துறைகளில் அனுபவமும் பரந்த அறிவும் கொண்டவராவார்.
அர்ஜுன மூர்த்தியின் மனைவியின் பெயர் பாமா. ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ள பாமாவும் தற்போதைய மத்திய் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் கல்லூரிக் காலம் தொட்டு நல்ல தோழிகளாக நட்பு பாராட்டி வருகின்றனர்.
1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில், உணவுத் துறையில் காலடி எடுத்துவைத்த அவர், ஜீனி என்ற பெயரில் உணவுப்பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். இந்நிறுவனம் இன்று இந்தியா முழுவதும் 8 தொழிற்சாலைகளை கொண்டு இயங்கிவருகிறது.
சாஃப்ட் காம் பிரைவேட் லிமிடெட் எனும் என்.எப்.சி தொழில்நுட்பம் நிறுவனத்தின் நிறுவனரான இவர், மறைந்த திமுக மூத்த தலைவர் முரசொலிமாறனின் அரசியல் ஆலோசகராக தனது அரசியல் வாழ்வைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. திமுக எம்.பி., தயாநிதிமாறன் உடன் பணியாற்றி வந்துள்ளார்.