தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மத்திய கூட்டுறவு வங்கி மோசடி வழக்கு சிபிஐக்கு மாற்றம்! - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.20 கோடி கடன் மோசடி, கையாடல் வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai high court

By

Published : Jul 10, 2019, 7:28 PM IST

காஞ்சிபுரத்தின் மத்திய கூட்டுறவு வங்கியின் பல்லாவரம், போரூர் கிளைகளில் கடந்த 2010, 2011 ஆண்டுகளில், 20.69 கோடி ரூபாய் கடன் மோசடி, கையாடல் தொடர்பாக போரூர், பல்லாவரம் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், வழக்கு தொடர்பான ஆவணங்கள் தீ விபத்தில் எரிந்து சாம்பலாகிவிட்டதாக காவல் நிலையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் வழக்குகளின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி வங்கியின் முன்னாள் ஊழியர் பாபு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, பாபு மேல் முறையீடு செய்தார். அதை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், நிர்மல்குமார் அடங்கிய அமர்வு, இதுவரை காவல்துறை நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ள விவரங்கள் மிகக்குறைவானது என்பதால் முழு மோசடியும் வெளிக்கொண்டு வர சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

கூட்டுறவு வங்கி தரப்பிலும் உண்மையை வெளிக்கொண்டு வர சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் சிபிஐக்கு பதில் சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய வழக்கு இது எனக்கூறி, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மோசடி குறித்த வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டனர்.வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஏற்கனவே சிபிஐ வசம் ஏராளமான வழக்குகளை விசாரிக்க வேண்டியுள்ளதால், இந்த வழக்கை விசாரித்து முடிக்க எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கவில்லை எனவும் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details