சென்னை: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரின் தனியார் நில காடுகள் அறிவிப்பிற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம் 1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இயற்றப்பட்டது. தனியார் நிலமாக இருந்தாலும் அதிலுள்ள காடுகளை கைப்பாற்றி, வலசை பாதைகளை பாதுகாப்பதுதான் இந்த சட்டத்தின் நோக்கம்.
இந்தச் சட்டம் இயற்றப்பட்ட 1949இல் இருந்து இதுவரை ஒரு வலசை பாதை கூட தனியார் காடுகளாக அறிவிக்கப்படவில்லை. இப்போது இந்தச் சட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ’கல்லார் இணைப்பு பாதையை’ தனியார் காடாக முதல் முறையாக அறிவித்தார்.
இதனால்தான் இந்த அறிவிப்பு இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது. இனி எந்த மாவட்ட ஆட்சியரும், இந்திய வனப் பணி அலுவலரும் இதை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு தனியார் நிலங்களில் உள்ள இணைப்பு பாதைகள் காப்பாற்றலாம்.
யானைகளின் வலசை பாதை குறித்து வெளிவந்துள்ள காட்டுயிர் பாதுகாப்பு அறக்கட்டளையின் (Wildlife trust of India) மிக முக்கியமான புத்தகம், the right of passage- elephant corridors of India. இது கல்லார் இணைப்பு பாதையை ’அதிமுக்கியத்துவம் வாய்ந்த சூழலியல் பகுதி’ என வரையறை செய்கிறது.
அதுமட்டுமில்லாமல், சத்தியமங்கலம் புலிகள் சரணாலத்திலிருந்து தெற்கு கோவை காடுகள் பகுதிக்கு யானைகள் செல்ல இந்த இணைப்பு பாதையைத்தான் பயன்படுத்துகின்றன. இந்தப் பகுதியில் மனிதர்களின் கட்டுப்பாட்டில் நிறைய தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் இந்த இணைப்புப் பாதை குறுகலாகவுள்ளது.
கல்லார் இணைப்புப்பாதையை பாதுகாக்க வேண்டும் என்கிற கோரிக்கை கடந்த பல பத்தாண்டுகளாக உள்ளது என்றும், நீலகிரி உயிர்கோள பகுதியில் உள்ள கல்லார் இணைப்புப்பாதை யானைகளின் வலசைக்கு முக்கியம் என்கிறார் ஓசை காளிதாசன்.
கடந்த 1949ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு விஷயத்தை, இன்று கோவை மாவட்ட ஆட்சியர் செயல்படுத்தி, காட்டுயிர்களை பாதுகாப்பதில் முன் உதாரணமாகத் திகழ்கிறார்.
தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்ட ஆட்சியர்களும், வனத்துறை அலுவலர்களும் இதைப் பின்பற்றி செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.