தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரூ.490 கோடி வரி செலுத்த சி.டி.எஸ்க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: காக்னிசன்ட் நிறுவனத்தின் ரூ.2,900 கோடி வரி பாக்கியில் ரூ.490 கோடியை நான்கு வாரத்திற்குள் வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சி.டி.எஸ்க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

By

Published : Sep 6, 2019, 11:13 PM IST

காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் எனும் சி.டி.எஸ் நிறுவனம், அமெரிக்கா, மொரிஷியஸ் நாடுகளில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு விற்பனை செய்திருந்த 94 லட்சம் பங்குகளை கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் திரும்ப வாங்கியது.

இதற்காக ரூ.19,415 கோடியை வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு திருப்பி செலுத்தியது. இந்தத் தொகைக்கு 15 சதவீத வரியாக 2,912 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை சி.டி.எஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி சி.டி.எஸ் நிறுவனம் ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து முறையீடு செய்ய வருமான வரித் துறையிலேயே பல வாய்ப்புகள் இருந்தும், அவற்றை விட்டுவிட்டு நேரடியாக உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக கூறி, சி.டி.எஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும், சி.டி.எஸ் செலுத்த வேண்டிய வரி பாக்கியில் ரூ.490 கோடியை வருமான வரித்துறைக்கு செலுத்தவும் உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சி.டி.எஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், நிர்மல் குமார் அடங்கிய அமர்வு, வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து நேரடியாக நீதிமன்றத்தை அணுகியது ஏற்க முடியாது என கூறி தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தனர்.

மேலும், தனி நீதிபதி உத்தரவிட்டபடி நான்கு வாரங்களில் வரி பாக்கி ரூ.490 கோடியை வருமான வரித்துறைக்கு செலுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், சி.டி.எஸ்-இன் மேல் முறையீட்டு மனுவை 8 வாரங்களுக்குள் பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டும் என வருமான வரித்துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details