தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 28ஆம் தேதி சர்வதேச அளவில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணம் முடிவடைந்து மீண்டும் செப்டம்பர் 9ஆம் தேதி தமிழ்நாடு திரும்பும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 14 நாள்கள் பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சருடன் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், எம்.சி. சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், விஜய பாஸ்கர் உள்ளிட்ட 21 பேர் உடன் பயணம் செய்யவுள்ளனர்.
பால் பொருட்கள்-கால்நடை, தொழில் ஆகிய துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் வெளிநாடு செல்வதால் அரசு நிர்வாகத்தை கவனிக்க பொறுப்பு முதலமைச்சரை நியமிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், முதலமைச்சருக்கு அடுத்த இடத்திலிருக்கும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பொறுப்பு முதலமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.