சென்னை: டெங்குவை தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், ”டெங்குவை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது கொசு ஒழிப்பு பணிக்கென 1,262 நிரந்தரப் பணியாளர்களும், 2,359 ஒப்பந்தப் பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
கொசு புழுக்களை அழிக்க நடவடிக்கை
சென்னை மாநகரில் உள்ள பகுதிகள் 500 வீடுகள் கொண்ட சிறு வட்டங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வட்டத்திற்கும் உள்பட்ட தெருக்களில் வாரந்தோறும் கொசு புழு வளரிடங்களான மேல்நிலை, கீழ்நிலை தொட்டி, கிணறு, டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவற்றில் கொசு புழுக்கள் இருப்பின் அழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
256 கைத்தெளிப்பான்கள், 167 அதிவேக திறன் கொண்ட கைத்தெளிப்பான்களைக் கொண்டு குடிசைப் பகுதிகள், பள்ளிகள், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும் திறந்தவெளி கால்வாய்களிலும் கொசுப்புழு அழிக்கும் மருந்துகள் தெளிக்கப்பட்டு கொசுக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.