சென்னை: 2022ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள், சிறப்புப் பேருந்துகள் இயக்கம் குறித்து, கடந்த டிசம்பர் 20ஆம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தலைமையில் பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அவற்றின்படி பொங்கல் இயக்கம் சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவருகின்றன. இந்நிலையில், தற்பொழுது தமிழ்நாடு அரசு வரும் 16ஆம் தேதி அன்று முழு ஊரடங்கினை அறிவித்துள்ளதால் மேற்படி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் மாறுதல் செய்து பொங்கலுக்குப் பின்பு ஜனவரி 16 முதல் 18 வரை இயக்குவதாக இருந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கம் 17ஆம் தேதிமுதல் 19 வரை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 16ஆம் தேதி அன்று முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு முழுத் தொகையும் திரும்ப இரண்டு நாள்களில் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் 16ஆம் தேதி அன்று பயணம் மேற்கொள்வதைத் தவிர்த்து மற்ற நாள்களில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மொத்தம் 16 ஆயிரத்து 709 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், பொங்கல் முடிந்து 15ஆம் தேதி அன்று தொலை தூரங்களிலிருந்து சென்னை வரும் பேருந்துகள் அனைத்தும், பயணிகள் புறநகர் ரயில் மூலமாகத் தங்களுடைய இருப்பிடம் செல்வதற்கு ஏதுவாக தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் வழியாக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:Holiday for Pongal: பொங்கலுக்கு 5 நாள்கள் தொடர் விடுமுறை - அரசு அறிவிப்பு