சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சதிஷ்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழ்நாடு நீதித்துறை பணியில் கடந்த 2011 ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் சேர்ந்த பூர்ணிமா, சட்டக்கல்லூரிக்கே செல்லாமல் நேரடியாக தேர்வை மட்டும் எழுதி சட்டப்படிப்பில் பட்டம் பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், வழக்கறிஞராக பூர்ணிமா பதிவு செய்யும் போது தமிழ்நாடு பார் கவுன்சில் இதனை ஆராய தவறி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தற்போது உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் பதிவாளராக பதவி வகிக்கும் பூர்ணிமா, பள்ளிப்படிப்பை ரெகுலர் முறையில் முடித்தற்கான ஆவணங்கள் இல்லை என்பதால், அப்பணியில் இருந்து அவரை நீக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு இன்று (அக்.12) தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், 10 ஆம் வகுப்பு படிக்காமல் திறந்த வெளி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பும், பின்னர் மைசூருவில் சட்டப்படிப்பும் முடித்து பூர்ணிமா நீதித்துறை பணியில் சேர்ந்திருப்பதாகவும், அரசாணையின்படி அவர் பதவியில் நீடிக்க தகுதியில்லை எனவும் வாதிட்டார்.
இதையடுத்து, தலைமை நீதிபதி சாஹி, பதிவுத்துறையிலிருந்து பெறப்பட்ட சான்றிதழ்களை சுட்டிக்காட்டி, விஜிலென்ஸ் பதிவாளர் பூர்ணிமா, 1984 இல் 12 ஆம் வகுப்பை 711 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருப்பதாக தெரிவித்து, அந்த சான்றிதழை காணொலியில் காட்டினார்.