தமிழ்நாடு

tamil nadu

நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் ஒப்பந்த விவகாரம் - அரசு பதிலளிக்க உத்தரவு

நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தை பதிவு செய்வதற்கு,ரூ.26.80 கோடி பதிவுக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By

Published : Feb 20, 2021, 9:51 PM IST

Published : Feb 20, 2021, 9:51 PM IST

Challenging desalination join venture cancellation order
Challenging desalination join venture cancellation order

சென்னை:நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டப்படி, 2ஆவது அலகை அமைக்கும் பணியை மேற்கொள்ள, கோப்ரா இன்ஸ்டாலேசியன்ஸ் மற்றும் டெக்டான் இன்ஜினியரிங் ஆகிய நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

தினமும் 150 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் இந்த திட்டப்பணிகள், ஆயிரத்து 689 கோடி ரூபாய் செலவில், 10.50 ஏக்கர் நிலத்தில் தொடங்கப்பட உள்ளன. இரு நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து திட்டப்பணிகளை மேற்கொள்வதால், அவ்விரு நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டு ஒப்பந்தம் பதிவு செய்யப்பட வேண்டும் என ஒப்பந்தப்புள்ளியின் நிபந்தனைகளில் கூறப்பட்டுள்ளது.

இந்த கூட்டு ஒப்பந்தத்தை பதிவு செய்வதற்கான கட்டணம் 26 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு விலக்களித்து தமிழ்நாடு அரசு, 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், “எந்த நியாயமான காரணங்களும் இல்லாமல், லாபம் ஈட்டும் இரு அந்நிய நிறுவனங்களுக்கு பதிவுக்கட்டண விலக்கு வழங்கியது சட்டவிரோதமானது என்பதால், இது சம்பந்தமான உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும் படி தமிழ்நாடு அரசுக்கும், இரு தனியார் நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details