ஒவ்வொரு மாநிலத்திலும் மத்தியப் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் பிராந்திய ராணுவத்தினர், உள்ளூர்ப் பகுதிகளில் பொதுமக்களின் தேவைகளுக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கண்டோன்மெண்ட் கழகம் (Cantonment board) எனப்படும் இந்த அமைப்பு, தமிழ்நாட்டில் சென்னை, ஊட்டி வெலிங்டன் ஆகிய பகுதிகளில் செயல்பட்டுவருகிறது.
பிராந்திய ராணுவத்தைச் சேர்ந்த இதன் வீரர்கள் உள்ளுரில் ஏற்படும் பாதிப்புகளுக்கேற்ப மாநில அரசின் அறிவுறுத்தலின்படி செயல்படுகின்றனர். சென்னையில் மட்டும் இப்பணிகளுக்காக 610 வீரர்கள் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
புயல் போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களில், இவர்களின் பணி இன்றியமையாத ஒன்று. அதேபோல், தற்போது கரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், நோய்த் தொற்றைத் தடுக்கும் பணியில் இவ்வீரர்களும் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பது, சுத்தப்படுத்துவது, கபசுரக் குடிநீர், முகக்கவசங்கள் ஆகியவை வழங்குவது, நோயாளிகளையும், அவர்களுடனான தொடர்புகளையும் கண்டறிவது என விரிகிறது இவர்களது பேரிடர் கால பணிகள்.
சென்னையில் புனித தோமையர் மலையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிராந்திய ராணுவப் படைப்பிரிவினர், குழுவுக்கு 11 பேர் என்ற எண்ணிக்கையில் மூன்று குழுக்களாக செயல்பட்டுவருகின்றனர். பொதுமக்கள் வாழும் பகுதிகளில் அனைத்து அடிப்படைத் தேவைகளும், மாநில அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டாலும், பிராந்திய ராணுவத்தின் பணிகளும் குறிப்பிடத்தக்க ஒன்றாகவே இருக்கிறது.
கரோனா பேரிடர்: களப்பணியில் பிராந்திய இராணுவத்தினர்! இதையும் படிங்க: மதுரையில் உயிரிழந்த இந்தோ - திபெத் பாதுகாப்பு படை வீரருக்கு அஞ்சலி!