சென்னை: அண்ணா சதுக்கம் முதல் பெரம்பூர் வரை செல்லக்கூடிய 29A பேருந்து நேற்று (செப்.29) மாலை பயணிகளுடன் ராஜா அண்ணாமலை சாலை பேருந்து நிலையத்திற்கு வந்தது. இதில், வியாசர்பாடியைச் சேர்ந்த சுரேஷ் குமார் (39) நடத்துநராக பணியாற்றினார்.
அப்போது அந்த பேருந்தின் ஜன்னல் வழியாக சுமார் 9 மாணவர்கள் ஏறி, பேருந்து படியில் நின்றுகொண்டு வந்தனர். இதனைக் கண்ட பேருந்து நடத்துநர் மாணவர்களை உள்ளே வருமாறு கேட்டுள்ளார். ஆனால், மாணவர்கள் கேட்காததால் பேருந்தை ஓரமாக நிறுத்தி, அவர்களை கீழே இறங்குமாறு நடத்துநர் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த இரண்டு மாணவர்கள், நடத்துனரின் மீது கல்லை வீசி தாக்கிவிட்டுத் தப்பிச்சென்றனர்.
பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் போராட்டம்
உடனே பாதிக்கப்பட்ட நடத்துநர், அந்த வழியாக வந்த மற்ற பேருந்து ஓட்டுநர்களிடம் நடந்தவற்றைத் தெரிவித்தார். பின்னர், பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை சாலையிலேயே நிறுத்திவிட்டு நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் சுமார் அரை மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.