தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 8, 2020, 6:15 PM IST

ETV Bharat / city

நீதிமன்ற உத்தரவை மீறி வேல் யாத்திரை: பாஜக தலைவர் எல். முருகன் கைது

சென்னை: நீதிமன்ற உத்தரவை மீறி வேல் யாத்திரை மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் எல். முருகன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வேல் யாத்திரை
வேல் யாத்திரை

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நவம்பர் 6ஆம் தேதி பாஜக தொடக்கிய வேல் யாத்திரையை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலும், 500க்கும் மேற்பட்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், பாதியில் நின்ற வேல் யாத்திரை, திருவொற்றியூர் வடிவுடை அம்மன் திருக்கோயிலில் இருந்து இன்று (நவம்பர் 8) மீண்டும் தொடங்கியது.

முன்னதாக பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன், கரு. நாகராஜன் அரசு தொடர்பு பிரிவு மாநில தலைவர் பாஸ்கரன் உள்ளிட்ட பாஜகவினருக்கு வடிவுடை அம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி கோயில் முன்பு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் கோயில் ராஜகோபுரம் முன்பு பாஜக வண்ண பலூன்களை பறக்க விட்டு அங்கு அமைக்கப்பட்ட மேடையில் பாஜக தலைவர் முருகன் உரையாற்றினார்.

பின்னர், வேல் யாத்திரை திருச்செந்தூர் நோக்கி புறப்படும் எனக் கூறி மீண்டும் நடை பயணத்தை தொடங்கினர். இதையடுத்து சம்பவ இடம் விரைந்த காவல்துறையினர், பாஜக மாநில தலைவர் எல். முருகன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட அக்கட்சியினரை கைது செய்தனர்.

வேல் யாத்திரை

வேல் யாத்திரை தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், யாத்திரைக்கு எத்தனை பேர் செல்ல வேண்டும், எந்த வழிகளில் செல்ல வேண்டும், காவல்துறைக்கு முறையான அறிவிப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், அதை பின்பற்றாமல் யாத்திரை மேற்கொண்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details