தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 16, 2021, 3:27 PM IST

ETV Bharat / city

இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கிய வங்கதேச இளைஞருக்குச் சிறை

வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த சம்பவம் குறித்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை, ரூ.10,000 அபராதம் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

சட்டவிரோதமாக இந்தியா வந்து தங்கிய வங்காள இளைஞர்
சட்டவிரோதமாக இந்தியா வந்து தங்கிய வங்காள இளைஞர்

சென்னை: ஆவடி அடுத்த அரிக்கம்பேடு கிராமத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த மகபூஹாஷாம் பாட்சா (24) என்பவர் கட்டடப் பணி செய்துவந்தார். இது குறித்து மத்திய உளவுத் துறை, காவல் துறைக்கு 2020 அக்டோபர் 30ஆம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது.

சட்டவிரோதமாகத் தங்கல்

இதனையடுத்து, இளைஞரைப் பிடித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் வைத்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில், "பாட்சா வங்கதேசத்திலிருந்து 2015ஆம் ஆண்டுஆற்றுப்பாதை வழியாகத் தப்பி மேற்கு வங்கம் வந்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து ரயில் மூலமாகப் பயணித்து கர்நாடக மாநிலம் பெங்களூரு, தமிழ்நாட்டில் கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் கூலி வேலை செய்துள்ளார். 2020 ஜூலை மாதம் சென்னைக்கு வந்து கட்டடப் பணியில் ஈடுபட்டுள்ளார். இவரிடம் பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு), விசா (நுழைவு அனுமதி) உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை" என்பது தெரியவந்தது.

2 ஆண்டு சிறை தண்டனை

மேலும், இவர் இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் துறையினர் பாட்ஷாவை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை இன்று (ஜூலை 16) அம்பத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பாட்சாவிற்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அதனை கட்டத் தவறினால் ஆறு மாத சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இதனையடுத்து காவல் துறையினர் பாட்ஷாவை புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: 'மூன்றாம் பாலினத்தவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கல்!'

ABOUT THE AUTHOR

...view details