சென்னைப் பல்கலைக் கழகத்தில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க ஒப்புதல்
16:49 October 19
சென்னை: சென்னைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் இறுதிப்பருவத்தில் பயிலும் மாணவர்கள் தவிர, மற்ற பருவத் தேர்வுகளில் தேர்வுக் கட்டணம் செலுத்தியவர்களுக்கு குறைந்தப்பட்ச மதிப்பெண்களுடன் தேர்ச்சி வழங்குவதற்கு ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என துணைவேந்தர் கெளரி தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பொது ஊரடங்கின் காரணமாக மாணவர்களுக்குத் தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இறுதிப்பருவத்தேர்வுகளைத் தவிர, பிற பருவப் பாடங்களில் தேர்வுக் கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கும், பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவின் வழிகாட்டுதலின்படி, அரியர் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என அறிவித்தது.
அதன் அடிப்படையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த அரியர் தேர்வு எழுத பணம் செலுத்திய மாணவர்களுக்கு அரசின் வழிகாட்டுதல்படி குறைந்தபட்ச மதிப்பெண்கள் வழங்க பல்கலைக்கழகங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக்குழுவின் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக அரியர் மாணவர்களுக்கான தேர்ச்சி வழங்குவது குறித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்த தீர்மானத்திற்கு சிண்டிகேட் ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து சென்னைப்பல்கலைக் கழக துணைவேந்தர் கெளரி கூறும்போது, 'பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இறுதிப் பருவத் தேர்வினைத் தவிர பிற பருவத்தேர்வுகளில் அரியர் வைத்து, தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்களின் அகமதிப்பெண் அடிப்படையில் குறைந்தபட்ச மதிப்பெண் வழங்கி தேர்ச்சி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இளங்கலை மாணவர்களுக்கு 40 மதிப்பெண்களும், முதுகலை மாணவர்களுக்கு 50 மதிப்பெண்களும் வழங்கப்படும்.
மாணவரின் அகமதிப்பெண் பூஜ்ஜியமாக இருந்தால் அவருக்கு குறைந்தபட்ச மதிப்பெண் வழங்கி தேர்ச்சி வழங்கப்படமாட்டாது. அதேபோல் தேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்படாது. தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்வினை எழுதுவதற்குத் தயார் நிலையில் இருந்தனர். எனவே, அவர்களுக்கு குறைந்தப்பட்ச மதிப்பெண்கள் பல்கலைக் கழக விதிகளுக்கு உட்பட்டு வழங்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இளங்கலைப் பட்டப்படிப்பு மாணர்களுக்கு 5 பருவத்திலும், முதுகலைப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு 3 பருவத்திலும் அரியர் வைத்திருந்தால் அவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண் வழங்கப்படும்.
மேலும் மாணவர் தேர்வு எழுதினால் கூடுதல் மதிப்பெண் பெற முடியும் என விரும்பினால், அவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று முடிவடைந்த பின்னர் கல்லூரிகளின் மூலம் நடத்தப்படும் தேர்வினை எழுதிக் கொள்ளலாம். மாணவர்கள் தங்களுக்கு நடத்தப்படாத பாடங்களைப் படிக்க விரும்பினாலும் அவர்களுக்கு கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.
கரோனா தொற்று காலத்தில் மாணவர்களிள் நலனைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் வழங்கி, தேர்ச்சி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' எனக் கூறினார்.