சென்னை வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜேசிடி பிரபாகரன் அயனாவரம் மார்க்கெட் தெருவில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஏராளமான அதிமுக தொண்டர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய பேரணியாக வந்த அவரின் தொண்டர்கள் அனைவரும் நூறு மீட்டருக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு, வேட்பாளர் மற்றும் வேட்பாளர் உடன் வந்த மூன்று பேரை மட்டும் காவல் துறையினர் அனுமதித்தனர்.
வேட்புமனுவைத் தாக்கல் செய்த ஜேசிடி பிரபாகரன் அயனாவரம் மார்க்கெட் தெருவில் திறந்த வேனில் நின்றுகொண்டு பரப்புரையைத் தொடங்கினார். அப்போது பேசிய அவர் 1980ஆம் ஆண்டு முதல் முறையாக எம்ஜிஆர் அவர்கள் என்னிடம் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடு, நீதான் வெற்றி பெறுவாய் என்று சொன்னார். அதேபோல் வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றேன். அதன்பிறகு இரண்டாவது முறையாக 2011-ல் ஜெயலலிதா என்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட சொன்னார். அப்போதும் திமுக பேராசிரியர் அன்பழகன் எதிர்த்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்.