தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’இலங்கையில் நாளை கரையை கடக்கும் புயல் குமரிக்கடல் நோக்கி நகரக்கூடும்’

சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாக வலுப்பெற்று குமரிக்கடல் பகுதிக்கு நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

news
news

By

Published : Dec 1, 2020, 3:12 PM IST

Updated : Dec 1, 2020, 3:28 PM IST

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “ காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, கன்னியாகுமரிக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 900 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது நாளை காலை புயலாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் மாலை அல்லது இரவில் இலங்கையில் கரையை கடந்து, மன்னார் வளைகுடா வழியாக குமரிக்கடல் பகுதிக்கு நகரக்கூடும்.

இதன் காரணமாக இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளையும் தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழையும், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

’இலங்கையில் நாளை கரையை கடக்கும் புயல் குமரிக்கடல் நோக்கி நகரக்கூடும்’

ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி புதுக்கோட்டை, சிவகங்கை, மாவட்டங்களில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை மறுநாள் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழையும், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கனமழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் சூறாவளி காற்று மணிக்கு 50-60 கிமீ வேகத்திலும், இடையிடையே 70 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

வரும் நான்காம் தேதி வரை மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென்தமிழக கடலோரப்பகுதி, கேரள கடலோரப்பகுதி, இலங்கை கடற்பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு உள்ளிட்டப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் “ என்றார்.

இதையும் படிங்க: சேலத்தில் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்குமா அரசு?

Last Updated : Dec 1, 2020, 3:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details