சென்னை: 10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் 2022ஆம் ஆண்டுக்குள் விரைந்து முடிவிற்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என காவல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மியான்மர் நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரத்தைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் உரிய ஆவணங்கள் இன்றி குடியேறியுள்ள 88 ரோஹிங்கியா இனத்தவர்கள் செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் தங்க வைக்கப்பட்டு தவறான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும், நடப்பாண்டில் பதிவான 723 போக்சோ வழக்குகளில் 86 வழக்குகள் தண்டனையில் முடிந்துள்ளது என்றும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
மற்ற வழக்குகளில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது விசாரணையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத அடிப்படைவாதிகள் மற்றும் ரவுடிகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதில் கடுமையான அணுகுமுறை பின்பற்றப்படுகிறது எனவும்; தாம்பரம் காவல் ஆணையரகம் அமைப்பதற்கு நிலம் ஒதுக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.