சென்னை:உடற்கூராய்வில் மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும் மாணவியின் உடைகளில் ரத்தக்கறைகள் இருந்ததாகவும் மாணவியின் உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவியின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் பள்ளி முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் போராட்டக்காரர்கள் கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதில் 20-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. காவல் உயர் அலுவலர் ஒருவரும் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், காவல் துறையினர் தடியடி நடத்தி, போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மாணவர்கள் கற்களை வீசித்தாக்குதல் நடத்தி பள்ளி வாகனங்களை அடித்து நொறுக்கினர்.
மேலும், காவல் துறை வாகனம் தீவைக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன. நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால், காவல் துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். எனினும், போராட்டக்காரர்கள் கலைந்து செல்வதுபோல் சென்று, மீண்டும் ஒன்று திரண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.