சென்னை: சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் குழந்தை பராமரிப்பு இல்லங்களில் தங்கி பயின்ற 7 இளைஞர்களுக்கு மெரைன் பவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட், (Maritime Foundation Charitable Trust) இந்துஸ்தான் கப்பல் பயிற்சி நிறுவனம் (Hindustan Institute of Maritime Training) ஆகிய பயிற்சி நிறுவனங்களில் 6 மாத காலம் கடல்சார் பயிற்சியில் சேர்வதற்கான சேர்க்கை ஆணை வழங்கப்பட்டன.
மேலும், அவர்கள் பயிற்சி முடித்த பிறகு தனியார் கப்பல் நிறுவனங்களில் பணியில் சேருவதற்கான பணி உறுதி ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.
இதற்காக, சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் குழந்தை பராமரிப்பு இல்லங்களில் தங்கியிருந்து வீடு திரும்பிய மற்றும் பிற்காப்பு நிறுவனங்களில் தங்கியுள்ள 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களில் கல்வி, உடற்கூறு, சமூக, பொருளாதார மற்றும் குடும்ப சூழ்நிலை ஆகியவற்றின் அடிப்படையில், ஆர். ராஜசேகர், கே. கார்த்திக், திரு.ஆர். சக்திவேல், எஸ். சரத், எஸ். வின்சென்ட் வில்லியராஜ், ஏ. கார்த்திக், எம். கிருஷ்ணன் ஆகிய 7 இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இம்மாணவர்களுக்கான பயிற்சி கட்டணத்தில் இந்நிறுவனங்கள் அளித்துள்ள கட்டணச் சலுகை போக, மீதமுள்ள பயிற்சி கட்டணமான 7 லட்சம் ரூபாய் தமிழ்நாடு இளைஞர் நீதி நிதியிலிருந்து வழங்கப்படும்.