சென்னையில் சுமார் 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் பாதிக்கப்பட்ட 5 ஆயிரத்து 38 பேர் வீட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 1,850 பேர் மருத்துவமனைகளிலும், 3 ஆயிரத்து 389 பேர் பாதுகாப்பு மையங்களிலும் உள்ளனர். கரோனாவால் பாதிக்கப்படுபவர்களை சுகாதாரத் துறை தனித்தனியாக பட்டியலிட்டு அவர்களை முறைப்படுத்துகின்றனர்.
அரசு மருத்துவமனை, தனியார் ஆய்வகங்கள், நடமாடும் பரிசோதனை மையங்கள் மூலம் தினந்தோறும் பரிசோதனை செய்யப்படுபவர்களில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை மண்டல வாரியாக பிரித்து பட்டியிலிடுகின்றனர். அவ்வாறான பட்டியலில் கடந்த 19 நாள்களில் 277 பேர் தலைமறைவாகி இருப்பதாக சென்னை மாநகராட்சி அதிர்ச்சித் தகவல்களை சென்னை காவல் துறைக்கு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக காவல் துறை தரப்பில், "கடந்த 23ஆம் தேதி முதல் ஜூன் 11ஆம் தேதிவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் பட்டியலில் 277 பேர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் பரிசோதனைக்குப் பின்னர் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை மேற்கொள்ளவில்லை. அவர்கள் அளித்த முகவரியிலும் அவர்கள் வசிக்கவில்லை. அவர்கள் எங்கே போனார்கள் குறித்து எந்த தகவலும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் குறித்த தொடர்பு எண், முகவரி தவறாக இருப்பதால் அவர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.